புத்தகம் படித்தால் சிறைத் தண்டனையில் இருந்து விடுதலையா? (read book no jail)

புத்தகம் படித்தால் சிறைத் தண்டனையில் இருந்து விடுதலையா? 

அறிவின் இரத்தம் புத்தகம் என்னும் பொன்மொழி சொல்லும் புத்தகத்தின் மகத்துவத்தை. அந்தவகையில் ஒரு நல்ல புத்தகம் திறந்துகொண்டால் நரகத்தின் வாசல் மூடப்படும் என்பது போல் சிறச்சாலையில் இருந்து விடுதலை அடையவும் புத்தகம் உதவுகின்றது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அதை விளக்குவதே இப்பதிவு.


சிறைத்தண்டனை

பொதுவாக ஒருவரின் குற்றம் நிரூபி்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் அத்தண்டனை முழுவதையும் அவர் அனுபவித்தாகவேண்டும். ஆனாலும் அவரின் தண்டனையானது சிறைக்காலத்தில் அவரின் நன்னடத்தை வெளிப்பாட்டின் அடிப்படையில் குறைக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.  அல்லது கரண்டியால் சுரங்கம் தோண்டியோ அல்லது வாடனுக்கோ சிறைக்காவலருக்கோ கையுட்டு கொடுத்தோ தப்பித்தால்தான் உண்டு. இவ்வாறு புத்தகம் படித்தால் சிறைத்தண்டனையைக் குறைத்து விடுதலை செய்யும் நாடுதான் பிரேசில் நாடு.

 

புத்தகம் வாசிக்கும் சிறைக்கைதி

பிரேசில் நாடு ஏன் இந்த திட்டத்தைக் கொண்டு வந்தது?

இந்தத் திட்டத்தை பிரேசில் அரசாங்கம் 2012ல் இத்திட்டத்தைக் கொண்டு வந்தது. (Redemption of Reading) பிரேசிலில் உள்ள 60% சிறைக்கைதிகள் பாடசாலைக் கல்வியையே நிறைவு செய்யாதவர்களாக உள்ளனர். அதனால்தான் அவர்கள் அதிகம் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் படித்தார்கள் என்றால் குற்றச்செயலில் ஈடுபடுவது குறையும் என்று கருதியே அரசாங்கம் இத்திட்டத்தைக் கொண்டு வந்தது.

 

சிறையில் சிறையில் புத்தக வாசிப்பின் நிபந்தனைகள் என்ன?

இங்குள்ள சிறைக்கைதிகள் எல்லோரும் அவர்களுடைய கடமைகளைச் செய்துமுடித்த பின்னர் புத்தகம் வாசிக்க அனுமதிக்கப்படுகின்றார்கள். ஆனால் சில நிபந்தனைகள் உண்டு.

படிப்பதற்கு எடுக்கப்படும் புத்தங்கள் இலக்கியம், விஞ்ஞானம், தத்துவம் ஆகிய துறைசார்ந்த புத்தகங்களையே படிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனாலும் எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்தால் ஒலிப்பதிவு செய்யப்பட்ட (audio) book) புத்தகங்களைக் கேட்க முடியும்.

அடுத்ததாக அவ்வாறு பெற்றுக்கொண்ட புத்தகத்தை அச்சிறைக்கைதி ஒரு மாத காலத்திற்குள் படித்து முடித்தல் வேண்டும்.

அடுத்ததாக, தான் அனுமதி பெற்று படித்து முடித்த புத்தகத்தைப் பற்றி  விமர்சனம் (book review) அல்லது அறிக்கை  எழுதி வெளியிட வேண்டும். ஒருவேளை தனக்கு எழுதத் தெரியாது என்றால் தான் படித்த புத்தகம் பற்றிய விமர்சனத்தை வாய்மொழி ழூலமாகவும் கூறுவதற்கு அனுமதி உண்டு. அதுவும் என்னால் முடியாது என்று கூறுபவர்கள் தான் கற்று அறிந்து கொண்ட விடயங்களை ஓவியமாகவும் வரைந்து காட்டுவற்கு அனுமதி உண்டு.


தண்டனைக் குறைப்பு எப்படி செயல்படுத்தப்படுகின்றது?

அவ்வாறு நீங்கள் படித்து முடித்து விமர்சனம் செய்யப்பட்ட புத்தகத்தை அதற்குரிய ஆய்வுக் குழுவினர் அனுமதித்தால் உரிய தண்டனைக் காலத்தில் இருந்து 04 நாட்கள் குறைக்கப்படும்.

என்னது இவ்வளவுதானா என்று எண்ணாதீர்கள். ஒரு மாதத்திற்கு ஒரு புத்தகம் படித்தால் 04 நாள்கள் தண்டனைக் காலத்தில் குறையும். அவ்வாறு ஒருவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு புத்தகம் படித்தால் ஒரு வருடத்தில் 48 நாள்கள் தண்டனைக் காலம் குறையும். அதேவேளை அவர்கள் தொடர்ச்சியாக 07 அல்லது 8 வருடங்கள் புத்தகம் படித்தால் அவர்களுக்கு 01 வருடம் தண்டனை குறையும்.


இந்தத் திட்டத்தின் நல்ல விளைவுகள் எவை?

வெறுமனே தண்டனை குறையும் என்பதை விட அவர்கள் பெற்றுக்கொள்ளும் அறிவு அளப்பரியது மட்டுமல்ல அவ்வாறானவர்களிடம் சழூகத்தின் மீதான அவர்களின் பார்வை மாறுபட்டிருக்கும்,  சிந்தனைத் திறன் அதிகரித்திருக்கும். அவர்களது பொறுமை பல மடங்கு அதிகரித்திருக்கும். தத்துவ சிந்தனை மேம்படுத்தப்பட்டிருக்கும்.  என்பதை மறுக்க முடியாது. ஆனாலும் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி தன்னை வளர்த்துக்கொண்டு மனம்மாறி வாழ்பவர்களும் உண்டு அல்லது தண்டனைக் காலத்தை குறைப்பதற்காக மட்டுமே புத்தகம் படித்து அதைப் பற்றிய விமர்சனத்தை ஏமாற்று வழியில் நிறைவேற்றவும் வாய்ப்புண்டு. ஆனால் அது அவர்களின் சிந்தனையைப் பொறுத்தது. இந்த ஒரு நல்ல திட்டத்தை நமது நாட்டுச் சிறைச்சாலைகளிலும் கொண்டு வந்தால் குற்றவாளிகளில் மனங்களிலும் சரி சமூகத்திலும் சரி மாற்றங்கள் உருவாகலாம்.

 

Comments